அங்கொட லொக்கா இந்தியாவில் விசம் வைத்து கொல்லப்பட்டாரா: விசாரணை ஆரம்பம் 

அங்கொட லொக்கா இந்தியாவில் விசம் வைத்து கொல்லப்பட்டாரா: விசாரணை ஆரம்பம் 

எழுத்தாளர் Bella Dalima

23 Jul, 2020 | 7:58 pm

Colombo (News 1st) பாதாள உலகக் குழு தலைவர் அங்கொட லொக்கா என்பவர் இந்தியாவில் உயிரிழந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்தத் தகவல்களை உறுதிப்படுத்தக்கூடிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

லசந்த சந்தன பெரேரா அல்லது அங்கொட லொக்கா எனும் திட்டமிட்ட வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் இந்தியாவில் கொல்லப்பட்டதாக இன்றைய பத்திரிகைகள் பலவற்றில் செய்திகள் வெளியாகியிருந்தன.

விசம் உடலில் கலந்த நிலையில், கவலைக்கிடமான முறையில் பெங்களூரில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கொட லொக்கா கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்ததாக பத்திரிகை செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையிலிருந்து சென்ற பெண் ஒருவர், அவரின் உடலுக்கு விசம் செலுத்தியதாகவும் இறுதிக் கிரியைகள் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் இடம்பெற்றதாகவும் பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் காட்சிகள் உள்ளடங்கிய வீடியோ அங்கொட லொக்கா என்பவரின் சகோதரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சட்ட ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் தமக்குக் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வமாக எமக்கு எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை. அதுபோன்ற உபாயங்கள் முன்னர் பயன்படுத்தப்பட்டதாக எமது குற்றவியல் வரலாற்றில் பதிவாகியுள்ளன. ஏதேனுமொரு தருணத்தில் அவர் போலியாக தகவல்களைப் பரப்பி மீண்டும் இலங்கைக்கு வந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கோ அல்லது வெளிநாட்டிற்கு பாதுகாப்பாகச் சென்று மறைந்திருந்து செயற்படுவதற்கோ வாய்ப்புள்ளது

என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

களுத்துறை சிறைச்சாலையின் கைதிகளை ஏற்றிச்சென்ற 2 பஸ்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தின் பிரதான சந்தேகநபராக அங்கொட லொக்கா உள்ளார்.

அதனைத் தவிர திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்