ETI மற்றும் சுவர்ணமஹால் வைப்பாளர்களுக்கு இழப்பீடு

ETI மற்றும் சுவர்ணமஹால் நிறுவன வைப்பாளர்களுக்கு இழப்பீடு 

by Staff Writer 22-07-2020 | 12:18 PM
Colombo News 1st) ETI மற்றும் சுவர்ணமஹால் (Swarnamahal Financial Services PLC) நிறுவனங்களின் வைப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மக்கள் வங்கியின் 45 கிளைகளினூடாக இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வைப்பாளர் ஒருவருக்கு அதிகபட்ச இழப்பீடாக 06 இலட்சம் ரூபா வரை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை வைப்பு காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவு திட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கு இணங்க காப்புறுதிக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இழப்பீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் போது, வைப்புப்பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இலங்கை மக்கள் வங்கியில் சமர்ப்பிப்பதன் ஊடாக இந்த நடவடிக்கைகளை முறையாக செயற்படுத்த முடியுமென இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கான முழுமையான ஆதரவை வழங்குமாறு இரு நிறுவனங்களின் வைப்பாளர்களிடமும் நிறுவனத்தின் சட்டரீதியான உரிமையாளர்களிடமும் இலங்கை மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் ETI Finance Limited நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் Financial Services PLC ஆகிய நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு கடந்த 13 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.