6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

6 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

by Staff Writer 22-07-2020 | 12:14 PM
Colombo (News 1st) ஆறு மாவட்டங்களை கேந்திரமாக கொண்டு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்றை நாளை (23) முதல் முன்னெடுக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,000 இற்கும் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தவகையில், * ஜனவரி - 11,607 பேர் * பெப்ரவரி - 5,363 பேர் * மார்ச் - 1,652 பேர் * ஏப்ரல் - 493 பேர் * மே - 1,392 பேர் * ஜூன் - 2,061 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதோடு இம்மாதத்தின் இதுவரையான காலப் பகுதியில் 803 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலினால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர கூறியுள்ளார். நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால், இந்த விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாளை (23) முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையிலும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலும் குறித்த 6 மாவட்டங்களிலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தில் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், சூழலை சுத்தமாக வைத்திருக்காதோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.