பாதாளக்குழு தலைவர்கள் சிறை அதிகாரிகளுக்கு மிரட்டல்

சிறையில் உள்ள பாதாளக் குழுத் தலைவர்கள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிரட்டல்: விரிவான விசாரணை 

by Staff Writer 22-07-2020 | 8:02 PM
Colombo (News 1st) பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாளக்குழு தலைவர்கள் மூவர் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கொஸ்கொட தாரக்க, ஹிக்கடுவ பொடி லெசி மற்றும் பிட்டிகல கெவுமா எனப்படுகின்ற பாதாளக்குழுத் தலைவர்களே கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த சில தினங்களாக பத்திரிகைகள் செய்தி வௌியிட்டிருந்தன. போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட திட்டமிட்ட வகையில் குறறச் செயல்களில் ஈடுபடுகின்ற பாதாளக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 30 பேர் வரை காலி பூசா சிறைச்சாலையின் விசேடப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த விசேடப் பிரிவு சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், வெலிக்கடையிலிருந்து மாற்றப்பட்ட குற்றவாளிகளே பெரும்பாலும் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வெலேசுதா, கொஸ்கொட தாரக்க, ப்ளூமென்டல் சங்க, கஞ்சிப்பானை இம்ரான், கனேமுல்ல சஞ்சீவ, ஆமி சம்பத், தெமட்டகொட சமிந்த, பொடி லெசி, பிட்டிகல கெவுமா ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்ற பிரபல குற்றவாளிகளும் இவர்களில் அடங்குகின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதாளக்குழு உறுப்பினர்களினால் அதிகாரிகளுக்கு விடுக்கப்படுகின்ற மிரட்டல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் விசேட குழுவொன்று பூசா சிறைச்சாலைக்கு சென்றிருந்தது. இந்தக் குழுவில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, புலனாய்வுப் பிரிவு ஆணையாளர் துசித்த உடுவர, புலனாய்வு உதவி ஆணையாளர் பிரசாத் பிரேமதிலக்க மற்றும் சிறைச்சாலைகள் அத்தியட்சகர் சிரிதத் தம்மிக்க ஆகியோருடன் விசேட அதிரடிப்படை உறுப்பினர்கள் மற்றும் சிறைச்சாலைகள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரும் அங்கம் வகித்தனர். குறித்த அதிகாரிகள் குழு அங்கு சென்றிருந்தபோது கொஸ்கொட தாரக்க, ஹிக்கடுவ பொடி லெசி மற்றும் பிட்டிகல கெவுமா ஆகியோர் அச்சுறுத்தும் தொணியில் சிறையில் இருந்தவாறே கூச்சலிட்டுள்ளனர். இதன்போது, மூன்றாவது சிறையில் இருந்த ஹிக்கடுவ பொடி லெசி தொடர்பில் அதிகாரிகளின் கவனம் திரும்பியிருந்தது. தன்னை சிறையில் தடுத்து வைத்திருந்தாலும் தனது வலையமைப்பு செயற்படுவதாகவும் தன்னால் எதையும் செய்ய முடியும் எனவும் பொடி லெசி அதிகாரிகளை அச்சுறுத்தியிருந்தார். அதிகாரிகள் குழு கொஸ்கொட தாரக்க தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கு சென்றபோது அவரும் அதிகாரிகளை மிரட்டியிருந்தார். விசாரணை அதிகாரிகள் கூறும் வகையில், அவரது மிரட்டல் இவ்வாறு அமைந்திருந்தது
எம்மிடம் தேவையானளவு ஆயுதங்கள் உள்ளன. இரும்பு உள்ளது. நீங்கள் இருக்கும் இடங்களைக் கண்டறிவது மிகவும் இலகுவானது. பூசா சிறைச்சாலையின் அத்தியட்சகர் வரை அனைவரையும் கொலை செய்வோம். பாதுகாப்பு செயலாளருக்கு கூறுங்கள். அவர் இங்கு வந்தாலும் இதனையே கூற வேண்டியுள்ளது. ஜனாதிபதி 5 வருடங்களே இருப்பார். ஜனாதிபதியென்றாலும் எனக்கு பிரச்சினை இல்லை. பொலிஸாரும் எனக்கு கீழேயே உள்ளனர். ஒரு கிராமத்தில் 10 வயதிற்கு குறைந்த பிள்ளைகளும் பெண்களும் மாத்திரமே எஞ்சியுள்ளனர். அந்த கிராமத்தின் மீது நான் அவ்வாறு தாக்கினேன். பொலிஸில் இருந்தவர்களையும் நான் கொலை செய்துள்ளேன். நான் நினைத்தால் இங்குள்ள கூரையைப் பிரித்து தப்பிச்செல்வேன். பாதுகாப்பு செயலாளரை வரச் சொல்லுங்கள். கதைக்க வேண்டும்
பின்னர் கெவுமா என்றழைக்கப்படும் நபரும் அதிகாரிகளை மிரட்டியிருந்தார்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை கலவரத்தின் போது STF-ஐ பயன்படுத்தி என்னை கொலை செய்ய முயற்சித்தனர். இங்கு சிறையிலடைத்து கொலை செய்ய முயற்சிக்கின்றனர். STF-இற்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்துள்ளேன்
சிறைச்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் சுமார் மூன்று மணித்தியாலங்களாக இது தொடர்பில் ஆராய்ந்து கொழும்பிற்கு திரும்பியதன் பின்னர் சிறைச்சாலைகள் ஆணையாளர், அரச புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட தரப்பினரை தௌிவூட்டியுள்ளனர். இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களமும் அறிக்கை சமர்ப்பித்ததாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டது. இந்த சம்பவத்தை அடுத்து சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, சிறைச்சாலைகள் கட்டுப்பாடு மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க, புலனாய்வுப் பிரிவு ஆணையாளர் துசித்த உடுவர, புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் பிரசாத் பிரேமதிலக்க ஆகியோரின் பாதுகாப்பை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சிறைச்சாலைகள் பொலிஸாரைப் பயன்படுத்தி பூசா சிறைச்சாலையில் தற்போது விசேட பாதுகாப்பு திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.