நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்தல்

நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்தல்

நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

22 Jul, 2020 | 3:58 pm

Colombo (News 1st) தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய ஒரேயொரு ஆயுதம் வாக்குச்சீட்டு எனவும் அதனை அனைவரும் முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதன் மூலம் தகுதியானவர்களை இம்முறை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியல் புனிதமானது எனவும் தவறானவர்கள் அதற்குள் நுழைவதால் அது சிலவேளை சாக்கடையாவதாகவும், இந்த புனிதமான அரசியலில் எல்லா மக்களைப் போன்றும் கிறிஸ்தவ மக்களும் ஈடுபட வேண்டும் என திருச்சபை விரும்புவதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியலில் முன்பு ஓரளவுக்கேனும் இருந்த ஒற்றுமை இன்று இல்லாமல் போய்விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 45 கட்சிகளைச் சேர்ந்த 405 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், தமிழர் அரசியல் எந்தளவிற்கு சிதறிச் சின்னாபின்னமாகியுள்ளது என்பது புலனாவதாக ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாட்சி, சுயநிர்ணயம், தமிழர் தாயகம், மொழியுரிமை போன்ற தமிழ் தேசியத்தின் அடிப்படைகள் என்றும் மாறாதவை எனவும் இவற்றை முன்னிலைப்படுத்தியே பல சகாப்தங்களாக அகிம்சைப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் தமிழ் மக்கள் முன்னெடுத்து வந்ததாகவும் மன்னார் மறைமாவட்ட ஆயர் நினைவுகூர்ந்துள்ளார்.

இவற்றை வென்றெடுக்கவே பல ஆயிரம் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இன்னும் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழ் தேசியத்திற்கு அப்பாற்பட்ட கொள்கையுடையவர்களை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு உரிமைகள் முக்கியமா அல்லது சலுகைகள் முக்கியமா என்றால், முதலில் உரிமைகள் முக்கியம் என்பதோடு அதனுடன் நின்று விடமுடியாது எனவும், மக்களின் அடிப்படைத் தேவைகளும் அபிவிருத்திகளும் தேவை எனவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இவை இரண்டிற்குமான தமது அரசியல் போராட்டம் சமாந்தரமாகச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், ஒன்றிற்காக ஒன்றை விட்டுக்கொடுக்க முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதற்காக அக்கறையோடும் துணிவோடும் செயலாற்றக்கூடியவர்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும் எனவும் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

ஆகவே, ஜனநாயக உரிமையை விட்டுக்கொடுக்கவோ அல்லது ஜனநாயகக் கடமையை உதாசீனம் செய்யவோ கூடாது எனவும் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை கூறியுள்ளார்.

போலியான, பொய்யான, நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளோடு வரும் வேட்பாளர்களை நிராகரிக்க வேண்டும் எனவும் அறிக்கையின் ஊடாக மன்னார் மறைமாவட்ட ஆயர் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்