நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் கடும் மழை

by Staff Writer 21-07-2020 | 7:33 AM
Colombo (News 1st) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று (21) இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் இன்று 50 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், ஒருநாள் மற்றும் நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், நிலவும் கடும் மழையுடனான வானிலையினால் முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கொழும்பு - பாதுக்க பிரதேச செயலக பிரிவிலும் காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல மற்றும் நெலுவ ஆகிய பகுதிகளுக்கும் முதலாம் நிலையான மஞ்சள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் களுத்துறை, தொடங்கொட, ஹொரணை, பேருவளை, பாணந்துறை, இங்கிரிய, மில்லனிய, மதுராவல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்ப்பட்ட பகுதிகளிலும் கேகாலை மாவட்டத்தின் தெரணியல, ருவன்வெல்ல, புலத்கொஹூபிட்டிய மற்றும் யட்டியந்தோட்டை பகுதிகளிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் காலி மாவட்டத்தின் நாகொட, எல்பிட்டிய, பத்தேகம, ஹிமதூவ, ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, வலல்லாவிட்ட, அகலவத்த மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, எஹலியகொட ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.