இந்திய தூதரக அதிகாரிகள் கிழக்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை

by Staff Writer 21-07-2020 | 8:57 PM
Colombo (News 1st) யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை திருகோணமலையில் நேற்று (20) சந்தித்தார். இது தொடர்பில் செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தூதரக அதிகாரிகள் என்ற வகையில், நாட்டின் பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடுவது சாதாரண விடயம் என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அவ்வாறான கலந்துரையாடல்கள் தலைநகரிலும் தலைநகருக்கு வௌியிலும் நடைபெற்றுள்ளதாக அந்த அலுவலகம் குறிப்பிட்டது. யாழ். இந்திய துணைத்தூதுவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது வீட்டில் நேற்று மாலை சந்தித்தார். இந்திய தூதரக அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். எனினும், இந்த சந்திப்பு தொடர்பிலான செய்திகளை ஔிப்பதிவு செய்வதற்கான அனுமதி ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. இதேவேளை, திருகோணமலை - நிலாவௌி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் மேலும் சில கட்சிகளின் பிரதிநிதிகளை, யாழ். இந்திய துணைத்தூதுவர் நேற்றிரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். இந்திய துணைத்தூதுவருடனான சந்திப்பு தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரிடம் இன்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அதுவொரு உத்தியோகபூர்வ சந்திப்பு அல்ல, தனிப்பட்ட விடயம் என இரா.சம்பந்தன் பதிலளித்தார். இதேவேளை, அவ்வாறான சந்திப்பு இடம்பெற்ற விடயம் தமக்குத் தெரியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். எனினும், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சந்திப்புகள் சாதாரணமானவை என அவர் கூறினார்.