அரச சபை தகர்ப்பு: அறிக்கை தாமதமாகும் சாத்தியம்

அரச சபை தகர்ப்பு: பிரதமர் நியமித்த குழுவின் அறிக்கை தாமதமாகும் சாத்தியம்

by Staff Writer 21-07-2020 | 8:42 PM
Colombo (News 1st) குருநாகலில் தொல்பொருட்களை நாசப்படுத்தியமை தொடர்பாக ஆராய்வதற்காக பிரதமர் நியமித்த குழுவின் முதற்கட்ட அறிக்கையைக் கையளிப்பது தாமதமாவதாகக் குழுவின் உறுப்பினரான தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திசாநாயக்க இன்று அறிவித்தார். ஆரம்ப கட்ட அறிக்கையை இன்று சமர்ப்பிப்பதாக அவர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். குருநாகல் நகரில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்த கட்டடம் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இரவு நகர சபையினால் இடித்து அழிக்கப்பட்டது. குறித்த கட்டடம் பிற்காலத்தில் நிர்மாணிக்கப்பட்டதாக இருந்தாலும், அது அமைந்துள்ள இடம் இரண்டாம் புவனேகபாகு மன்னரின் அரச சபை கூடிய இடமாகக் கருதப்படுகிறது. இவ்விடத்தில் தொல்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முதல் நாள் இரவில் கட்டடம் இடித்து அழிக்கப்பட்டுள்ளது. இன, மத, குல, கட்சி வேறுபாடுகளின்றி இந்த செயற்பாட்டிற்கு எதிராக தொடர்ச்சியாக, பகிரங்கமாக கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நலீன் பண்டார, அஷோக்க அபேசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று குருநாகலில் தொல்பொருள் பகுதிகள் அழிக்கப்படுவதை நிறுத்தக் கோரி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.