ரிஷாட் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தால் சர்ச்சை

ரிஷாட் தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடிதத்தால் சர்ச்சை

எழுத்தாளர் Staff Writer

21 Jul, 2020 | 8:21 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பதிவு செய்வதை ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அந்தக் கடிதத்தின் ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தது.

இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்ற “சிங்களே அப்பி” தேசிய அமைப்பின் தலைவர் ஜம்புரேவெல சந்திர ரத்தன தேரர் இது தொடர்பில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து, ஜம்புரேவெல சந்திர ரத்தன தேரர் பின்வருமாறு குறிப்பிட்டார்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் பொதுமக்களின் பணத்தை சூறையாடியவர்களைப் பாதுகாக்கும் இடமாக தேர்தல்கள் ஆணைக்குழு மாறியுள்ளது. இது தொடர்பிலான எமது கடும் ஆட்சேபனையை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்தோம். 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவர பக்கசார்பான முறையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்டுள்ளார் என்பதும் தௌிவாகின்றது

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பின்வருமாறு விளக்கமளித்தார்.

கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இரண்டு கடிதங்களை சமர்ப்பித்தனர். விசாரணைக்கு அழைக்கப்படுவதாலும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்குவதனாலும் அவர்களது தேர்தல் பரப்புரைகள் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னர் 10 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதை ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியிருந்தார். அவருக்கு மன்னார், வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்வதற்கு காலம் தேவை. எனவே, முடியுமானால் தேர்தல் நிறைவுற்றதன் பின்னர் வாக்குமூலம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரியிருந்தார். ரவி கருணாநாயக்கவும் அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு நாங்கள் அறிவித்திருந்தோம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்