by Staff Writer 20-07-2020 | 2:29 PM
Colombo (News 1st) நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, காலி ஆகிய மாவட்டங்களில் அனர்த்தம் ஏற்படக்கூடிய பகுதிகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
ஆகவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மாகாணங்களில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 08 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை - தெஹியோவிட்ட பகுதியில் அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
*தெஹியோவிட்ட பகுதியில் 219 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
*காலியில் 160 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
*எத்குந்துர பகுதியில் 135.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
*களுத்துறை - மீகஹதென்ன பகுதியில் 117 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
*இரத்தினபுரி - பரகடுவ பகுதியில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
*கம்பஹா - பஸ்யால பகுதியில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தெற்கு அதிவேக வீதியின் கொழும்புக்குள் பிரவேசிக்கும் பகுதி இமதூவ மற்றும் பின்னதூவ பகுதிகளுக்கிடையில் தற்காலிகமாக மூடப்பட்டது.
102 ஆம் கிலோமீற்றர் கல்லை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனால், மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், ஒருநாள் மற்றும் நீண்டநாள் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.