நாட்டில் நிலவும் சூழலியல் அச்சுறுத்தல் 

by Staff Writer 20-07-2020 | 8:33 PM
Colombo (News 1st) இயற்கையின் சமநிலையை பேணுவதில் மரங்கள் நிறைந்த அடர் காடுகளுக்கு எப்போதும் தனியிடம் உண்டு. எனினும், இலங்கையில் காணப்படும் முக்கிய சூழலியல் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது காடழிப்பே. மனிதப் பரம்பல், மனிதனின் அளவில்லாத தேவைகள் இயற்கை பேரழிவுகள் உலகில் வன வளம் அருகி வருகின்றமைக்கான முக்கிய காரணிகளாக அமைகின்றன. 1990 ஆம் ஆண்டு முதல் 2016 ஆண்டு வரையான காலப்பகுதியில் உலகளவில் ஐந்து இலட்சத்து இரண்டாயிரம் சதுர மைல் பரப்பான வனப்பகுதி காவுகொள்ளப்பட்டுள்ளது. இது தென் ஆபிரிக்காவின் பரப்பிற்கு இணையான பரப்பாகும். மனிதனின் தேவைகளுக்காக மரங்களை வெட்ட ஆரம்பித்தமை முதல் 46 வீத மரங்கள் வெட்டியழிக்கப்பட்டுள்ளன. உலகில் காடழிப்பு அதிகம் இடம்பெறும் பகுதிகளில் 'இந்து சமுத்திரத்தின் முத்து' என வர்ணிக்கப்படும் இலங்கைக்கு எப்போதும் தனியிடம் உண்டு. 1920 ஆம் ஆண்டு நாட்டை சூழ காணப்பட்ட காடுகளின் பரம்பல் 49 வீதமாக காணப்பட்டதுடன் 2015 ஆம் ஆண்டில் அது 29 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளமை இதற்கு தகுந்த உதாரணமாகும். வில்பத்து, யால போன்ற பாரிய காடழிவிற்கு இது வித்திடும் நிலையே காணப்படுகின்றது. முல்லைத்தீவு - கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் 2010 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 1000 ஏக்கர் அழிக்கப்பட்டுள்ளதுடன், 3000 பறவைகளும் கொல்லப்பட்டுள்ளமையை விக்கிபீடியா உறுதி செய்கின்றது. யுத்தத்தின் பின்னர் அதிக காடழிப்புகள் சட்டவிரோதமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றது. பெரும் மரக்கடத்தல் மாஃபியாக்கள் இந்த இயற்கை சீரழிவை மேற்கொள்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசசெயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஐயன்குளம், கோட்டை கட்டிய குளம், தென்னியன்குளம், பழைய முருகண்டி உள்ளிட்ட இடங்களை உள்ளடக்கிய காடுகளின் நிலையே இது. பயன்தரும் மரங்கள் வெட்டப்பட்டு பல்வேறு இடங்களுக்கும் கடத்திச் செல்லப்படுகின்றன. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருக்கு தொடர்ச்சியாக முறையிட்ட போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இந்த பகுதிகளில் பல நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த பாலை மரங்கள், முதிரை மரங்கள் என்பன குறிவைத்து கடத்தல்காரர்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. மரக்கடத்தல் தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகின்ற போதிலும் 25 வீதமான வழக்குகள் மாத்திரமே நீதிமன்றத்திற்கு செல்லும் நிலை காணப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதிகாரிகள் என அனைவர் மேலும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது. மிருகங்கள், பறவைகள் மாத்திரமின்றி மனிதனின் எதிர்கால நிலையையும் கேள்விக்குறியாக்கும் சமூக பொறுப்புணர்வற்ற இந்த சுயநல நடவடிக்கைள் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தில் கட்டாயமல்லவா ?