தேர்தல் சட்டத்தை மீறிய 29 பேர் மீது முறைப்பாடு

தேர்தல் சட்டங்களை மீறிய 29 வேட்பாளர்களுக்கு எதிராக முறைப்பாடு

by Staff Writer 20-07-2020 | 3:16 PM
Colombo (News 1st) தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 29 வேட்பாளர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். புத்தளம், குருணாகல் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, கடமை நேரத்தில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். இவர்களில் பொலன்னறுவை மற்றும் ஜாஎல பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரிகளும் அடங்குகின்றனர். இவ்வாறு, தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார். மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 207 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் 222 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 64 வாகனங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை, தேர்தலுடன் தொடர்புடைய 50 குற்றங்கள் தொடர்பில் அறிக்கையிடப்பட்டுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த விஜேசூரிய கூறியுள்ளார்.