by Staff Writer 19-07-2020 | 10:59 AM
Colombo (News 1st) கிரிஉல்ல பகுதியில் கட்டளையை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இன்று (19) அதிகாலை பன்னலவில் இருந்து கிரியுல்ல நோக்கி நிறுத்தாமல் பயணித்த கார் மீது யக்காபெதி பகுதியில் வைத்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயமேற்படவில்லை.
இதன்போது காரில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் என தெரிவித்து CAMPBELL PARK பகுதியில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தும் நிலையத்தில் இருந்து காரொன்றை வாடகை அடிப்படையில் சந்தேக நபர்கள் பெற்றுச் சென்றுள்ளனர்.
சாரதியுடன் சென்ற குறித்த சந்தேக நபர்கள் குளியாப்பிட்டிய, கொஹிலவள பகுதியில் வைத்து சாரதியை கட்டிவைத்துவிட்டு காரை கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கமைய வீதி தடைகளை ஏற்படுத்திய பொலிஸார் இன்று அதிகாலை முதல் சோதனைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது பன்னலவில் இருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த குறித்த கார், கட்டளையை மீறி பயணித்ததை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.