by Bella Dalima 18-07-2020 | 7:33 PM
Colombo (News 1st) முதன்முறையாக 100 மணித்தியால காலப்பகுதியில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 42 இலட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், ஆறு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான 37,743 பேரில் அதிகளவானோர் அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளனர்.
உலகில் அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகும் அமெரிக்காவில் நேற்று மட்டும் 77ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அங்கு இதுவரை 37 இலட்சத்திற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அமெரிக்காவில் 1,42,000-இற்கும் அதிகமானோர் COVID-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், அரிசோனா, ஃப்ளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
பிரேசிலில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 20,48,000-ஐக் கடந்துள்ளதுடன், 77ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் மூவாயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதுடன், 1100 பேர் உயிரிழந்துள்ளனர்.
நியூ சவுத்வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களில் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்வதால், அவுஸ்திரேலியாவின் அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரை பிற்போடுவதற்கு அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் தயாராகி வருகின்றார்.
அவுஸ்திரேலியாவில் 11ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 116 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் உலகளாவிய ரீதியில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்கள் பதிவான நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்திலுள்ளது.