புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்ப்பு: விசாரணைக்கு பிரதமரால் நிபுணர் குழு நியமனம்

by Staff Writer 17-07-2020 | 4:48 PM
Colombo (News 1st) வரலாற்று சிறப்புமிக்க குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவை தகர்க்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்கு பிரதமரால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஐவர் அடங்கிய நிபுணர் குழுவொன்றே விசாரணைகளுக்காக நியமித்துள்ளதாக கலாசார மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்க தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்ட செயலாளர் R.M.R.ரத்னாயக்க, தொல்லியல் ஆய்வாளர் D.J.குலதுங்க , கலாசார மற்றும் புத்தசாசன அமைச்சின் பிரதி பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க, மத்திய கலாசார நிதியத்தின் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர், வாஸ்து சாஸ்திர நிபுணர் சுமேதா மாத்தொட்ட ஆகியோர் இந்த குழுவின் ஏனைய அங்கத்தவர்களாவர். குருநாகல் புவனேகபாகு மன்னரின் அரசவைக் கட்டடம் கடந்த 14 ஆம் திகதி தகர்க்கப்பட்டமை தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு இந்தக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.