COVID ஒழுங்கு விதிகளுக்கு சட்ட மா அதிபர் அனுமதி

தேர்தல் தொடர்பான COVID ஒழுங்கு விதிகளுக்கு சட்ட மா அதிபர் அனுமதி

by Staff Writer 17-07-2020 | 7:01 PM
Colombo (News 1st) தேர்தல் அலுவலகங்கள், கூட்டங்கள், பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார செயலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட COVID ஒழுங்கு விதிகளுக்கு சட்ட மா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளரினால் பொதுத் தேர்தலுக்கான COVID ஒழுங்கு விதிகள் குறித்து நேற்று முன்தினம் (15) சட்ட மா அதிபரிடம் அனுமதி கோரப்பட்டிருந்ததாக சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். எனினும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த ஜூன் மாதம் 27 ஆம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்த ஒழுங்கு விதிகளுக்கான ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த தற்போதைய சூழ்நிலையில் சுகாதார வழிமுறைகள் அடங்கிய ஒழுங்கு விதிகளுடனான வர்த்தமானி வௌியிடல் அவசியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரக்கூட்டம், தேர்தல் பிரசார அலுவலகம் ஆகியன தொடர்பான ஒழுங்கு விதிகளே அனுமதி கோரி சட்ட மா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும், அதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் இணைப்பு அதிகாரி, சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.