சுனில் ரத்நாயக்கவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் பரிசீலனை

by Staff Writer 17-07-2020 | 7:39 PM
Colombo (News 1st) மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. உச்ச நீதிமன்ற நீதிபதிகளான L.T.B.தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இரண்டு மனுக்கள் உறவினர்கள் சார்பிலும், ஏனைய இரண்டும் பொது நல மனுக்களாகவும் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமையவே இந்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த மனுவிற்கமைய, இவ்வாறு பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தை நிறுத்துமாறு, அதற்கான இடைக்கால தடையுத்தரவை மனுதாரர்கள் கோருகின்றனர். இந்த மன்னிப்பைப் பெற இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்கவிற்கு தகைமையில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். அரசியலமைப்பின்படி எந்தவொருவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியும். பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களுக்கு இந்நாட்டின் ஜனாதிபதிகள் கடந்த காலத்தில் மன்னிப்பு வழங்கினர். எனினும், போரில் தெற்கிலுள்ள மக்களைப் பாதுகாப்பதற்காக போராடியதற்கு பிரதிபலனாகவே சுனில் ரத்நாயக்கவிற்கு இந்த மன்னிப்பு கிடைத்துள்ளது
என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி பிரேமநாத் சீ.தொலவத்த குறிப்பிட்டார். சில வழக்குகளில் சுனில் ரத்நாயக்கவிற்கு அறிவித்தல் கிடைத்திருக்காத காரணத்தினாலும் வேறு சில வழக்குகளில் நீதியமைச்சின் புதிய செயலாளரின் பெயர் கொடுக்கப்படவில்லை என்பதாலும் அதற்குக் காலம் கொடுத்து செப்டம்பர் 24ஆம் திகதிக்கு 4 வழக்குகளுக்கு திகதி குறிப்பிடப்பட்டிருப்பதாக மனுதாரர்கள் தரப்பு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.
19ஆவது திருத்தத்திற்குப் பிறகு ஜனாதிபதியின் எல்லா செயல்களையும் சவாலுக்கு உட்படுத்தலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கின்ற காரணத்தினால் தான் 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்ததையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி வெற்றி பெற்றோம். இப்போதும் ஜனாதிபதியின் இந்த செயலையும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவின் மூலமாக சவாலுக்கு உட்படுத்தலாம். ஆகையால் தான் இந்த நான்கு வழக்குகள் அப்படியாக பதிவு செய்யப்பட்டுள்ளன
என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.