COVID-19: 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்

COVID-19 தொற்றுக்குள்ளான 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர்

by Staff Writer 16-07-2020 | 7:51 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான 8 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உறவினர்கள் என அவர் குறிப்பிட்டார். அதற்கமைய, கந்தக்காடு கொத்தணி மூலம் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களின் எண்ணிக்கை 542 ஆக அதிகரித்துள்ளது. இராஜாங்கனை உள்ளிட்ட அனுராதபுரத்தின் நிலைமை தொடர்பில் வட மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் பாலித்த பண்டார கருத்துத் தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் இதுவரை 27 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் இராஜாங்கனையைச் சேர்ந்தவர்கள். கடந்த நான்கு நாட்களில் இராஜாங்கனையில் 813 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 1143 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர். நாளையும் 50 பேருக்கு PCR பரிசோதனை செய்யவுள்ளோம்
என பாலித்த பண்டார கூறினார். கெரோனா நோய் அறிகுறிகள் தென்பட்டமையினால், கந்தளாய் அக்போபுரவைச் சேர்ந்த இருவர் நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை, பொலன்னறுவை - லங்காபுர சுகாதார வைத்திய பிரிவிற்கு உட்பட்ட லங்காபுர, தம்பால மற்றும் பட்டுனுகம பிரதேசங்களைச் சேர்ந்த 39 பேர் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.