Blue Ocean குழுமம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

by Staff Writer 16-07-2020 | 8:47 PM
Colombo (News 1st) Blue Ocean எனப்படும் வீடு மனை விற்பனை நிறுவனக் குழுமம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் சொகுசு தொடர்மாடிக் குடியிருப்புத் திட்டங்களை ஆரம்பித்து, கொள்வனவாளர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டபோதிலும் உரிய நேரத்தில் குடியிருப்புகளை வழங்கத் தவறியதாகத் தெரிவித்து இந்த நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் கொள்வனவாளர் ஒருவர் அண்மையில் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் குறித்த நிறுவனத்தின் இரண்டு பணிப்பாளர்களை மன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. இதேவேளை, தமக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குறித்த நிறுவனம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் J.C.N.D. திசாநாயக்க தெரிவித்தார். கூட்டு வீட்டு வசதி சட்டத்தில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, 18 மாதங்களுக்குள் உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கு விற்பனையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு ஆதன முகாமைத்துவ அதிகார சபையின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார். இந்தக் கால அவகாசம் கடந்துள்ளதால், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.