அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடிதம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாவை சேனாதிராஜா ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 16-07-2020 | 4:21 PM
Colombo (News 1st) தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மற்றும் அவசரகால நிலையின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் 10 முதல் 24 வருடங்கள் வரை சிறைகளில் தமது காலத்தைக் கழித்து வருவதாக மாவை சேனாதிராஜா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனாவின் பரவுகை அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கரிசனை செலுத்த வேண்டும் என கடிதத்தின் மூலம் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். சிறைக்கைதிகள் சிலரும் சந்தேகநபர்களும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய கைதிகளும் தொற்றுக்குள்ளாகும் அச்சுறுத்தல் உள்ளதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கைதிகளின் உறவினர்கள் கைதிகளைப் பார்வையிட அனுமதிக்கப்படாமையினால், கைதிகள் மனோ ரீதியிலும் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேசத்தில் நீண்ட கால வழக்குகள் கிடப்பில் உள்ள கைதிகள் பிணையில் விடுவிக்கப்படுகின்றமை தொடர்பிலும் மாவை சேனாதிராஜா கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் நீதித்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.