முதலாவது மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் விரிவான விசாரணை

முதலாவது மத்திய வங்கி முறிகள் மோசடி தொடர்பில் விரிவான விசாரணை

எழுத்தாளர் Staff Writer

16 Jul, 2020 | 1:52 pm

Colombo (News 1st) முதலாவது முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக நிதிதூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலும் விரிவாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.

இது தொடர்பிலான விசாரணைகளின் பெறுபேறுகளை எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி மன்றில் முன்வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்ட மா அதிபர் சார்பில் இன்று மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர விடயங்களை முன்வைத்தார்.

இலங்கை மத்திய வங்கியின் முதநிலை வணிகராக செயற்பட்ட Perpetual Treasuries நிறுவனத்தினூடாக 2015 ஆம் ஆண்டில் மத்திய வங்கி முறிகளை கொள்வனவு செய்வதற்காக ஸ்டெல்லா அயிராங்கனி திசாநாயக்க மற்றும் சுனில் பிரேமரத்ன ஆகியோரினால் முதலீடு செய்யப்பட்ட நிதி முதிர்ச்சியடைந்திருந்தால் அதனை மீள செலுத்த உத்தரவிடுமாறு முதலீட்டாளர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி நலின் டி சில்வா மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த நிதியை திருப்பிச் செலுத்துமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு உத்தரவிடுவது தொடர்பில் முறைப்பாட்டாளர் தரப்புக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர மன்றுக்கு அறிவித்தார்.

வழக்கின் பிரதிவாதிகளான அர்ஜூன் அலோசியஸ், ஜெப்ரி ஜோசப் அலோசியஸ் மற்றும் கசுன் பாலிசேன உள்ளிட்ட சந்தேகநபர்கள் 6 பேரும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்