கைதிகள் கொலை வழக்கு: புலனாய்வு அதிகாரி விடுதலை

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கு: சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இந்திக்க சம்பத் விடுதலை

by Staff Writer 15-07-2020 | 6:09 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைக் கைதிகள் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த மூன்றாவது பிரதிவாதியான சிறைச்சாலை புலனாய்வு அதிகாரி இந்திக்க சம்பத் இமதூவகேவை விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில், கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் மஞ்சுல திலகரத்ன ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் 8 கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதிவாதியான புலனாய்வு அதிகாரி சம்பத் இமதூவகேவை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சட்ட மா அதிபர் சார்பில் வழக்கை வழிநடத்தும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் டிலான் ரத்னாயக்கவினால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு போதுமான சாட்சியங்கள் இன்மையால், இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்தார். அதற்கமைய, மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிரதிவாதியை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவித்தது. வழக்கின் முதலாவது மற்றும் இரண்டாவது பிரதிவாதிகளான இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ, முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா ஆகியோருக்கு எதிராக சாட்சி விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதி நடத்தவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

ஏனைய செய்திகள்