கொரோனா தொடர்பில் உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பில் உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

கொரோனா தொடர்பில் உண்மையான தகவல்களை வௌியிடுங்கள்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2020 | 7:48 pm

Colombo (News 1st) கொரோனா தொடர்பில் தற்போது எழுந்துள்ள நிலைமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று ஊடக சந்திப்பொன்றில் தௌிவுபடுத்தியது.

தற்போது நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதையும் நோய் பரவுவதையும் கவனத்திற்கொள்ளும்போது நிலைமை அன்று இருந்ததை விடவும் பாரதூரமானதாக உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷெனால் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொது சுகாதாரம் தொடர்பில் ஆபத்தான நிலையில் நாம் உள்ளோம். சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் எடுக்கும் சரியான தீர்மானங்களிலேயே எதிர்கால நிலை தங்கியுள்ளது. அதற்கு தேவையான அரசியல் ஒத்துழைப்பு கிடைத்துள்ள தருணத்தில், சுகாதார அமைச்சு சரியான தீர்மானங்களை மேற்கொள்ளாவிட்டால் இந்த நிலைமை பாரதூரமாக அமையலாம். தொழில்நுட்பத் தீர்மானங்களை எடுக்கும் குழுவினர் அடிக்கடி கூடி இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும்

என ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

வட மாகாணத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களை சந்தித்தவர்கள் பதிவாகியுள்ளனர். ஒவ்வொரு மாகாணங்களிலும் நிலவும் அபாயம் மாறுபட்டதாகும். சிறு பிரிவுகளைத் தடுக்க நாம் பிராந்திய முடக்கத்தை மேற்கொள்ள முடியும். அவ்வாறு செய்தால் அதன் தாக்கம் குறைவடையும். தொழில்நுட்ப நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாட்டிற்கே இதன்மூலம் ஏற்படுகின்ற தாக்கத்தை தவிர்க்க முடியும்

என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா தொற்று தொடர்பில் தவறான கருத்துக்கள் சமூகமயப்படுத்தப்படுவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் நவீன் டி சில்வா கோரிக்கை விடுத்தார்.

தவறான கருத்துக்கள் பரவுவது இரண்டாம் அலை ஏற்படுவதைத் தடுப்பதற்கு தடையாக உள்ளதாக அவர் கூறினார்.

தகவல்களை வழங்கும் தரப்பினர் முறையாக ஊடகங்களுக்கு தகவல்களை வழங்காததால், பிழையான தகவல்கள் சமூகமயப்படுவதற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது

என நவீன் டி சில்வா குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்