COVID-19 சமூகப்பரவலாகும் நிலை தென்படுகிறது

COVID-19 சமூகப்பரவலாகும் நிலை தென்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

by Bella Dalima 14-07-2020 | 8:51 PM
Colombo (News 1st) COVID-19 தொற்று தொடர்ந்தும் ''உலகத்தொற்றாக'' பரவியுள்ளதால், அது சமூகப்பரவல் வரை விருத்தியடையும் நிலை தென்படுவதாக விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை அவசர நிலையாக மாற்றமடைந்தால், நாட்டின் சுகாதார வசதிகளைக் கருத்திற்கொள்கையில், அது பாரதூரமான நிலைமையை ஏற்படுத்தக்கூடும் என விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் L.A.ரணசிங்கவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் தாமதப்படுத்தாமல், இந்த நிலைமையை அதிகரிப்பதைத் தடுப்பதற்குத் தேவையான வரையறைகளை விதிக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் ஒன்றுகூடும் அரசியல் கூட்டங்களை நடத்துதல், வகுப்புக்களை நடத்துதல் மற்றும் பாடசாலைகளை மீளத் திறத்தல் தொடர்பில் மீளாய்வு செய்யுமாறும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பொதுப்போக்குவரத்து சேவை தொடர்பில் சுகாதார வரையறைகளை மீண்டும் பிறப்பிக்க வேண்டியதன் தேவை குறித்தும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சமூகத்தில் எழுமாற்றாக தெரிவு செய்து பரிசோதனை நடத்துவதுடன், PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அத்தியாவசியமானது எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதேவேளை, தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை போதுமானதல்ல என அரச மருத்துவ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மாதமொன்றில் குறைந்தபட்சம் 68 ஆயிரம் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், அதற்காக நாள்தோறும் 2500 பரிசோதனைகளேனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். பயண வரையறைகள் மாத்திரம் போதுமானதல்ல என்பதால், நாடளாவிய ரீதியில் எழுமாற்றாக பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்பது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும்.