ரவி,அர்ஜூனிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு ஆலோசனை

முறிகள் மோசடி: ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு ஆலோசனை

by Bella Dalima 14-07-2020 | 6:28 PM
Colombo (News 1st) 2016 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்ற முறிகள் ஏலம் தொடர்பில் ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ.விக்ரமரத்னவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயத்தை சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என கடந்த 07 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கமைய, 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற முறிகள் ஏலத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களிடம் வாக்குமூலங்களை பதிவு செய்ய எவ்வித ஆட்சேபனைகளும் இல்லை என அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். சந்தேகநபர்களை கைது செய்யவும் தடுப்புக் காவலில் வைக்கவும் அனுமதி வழங்க மறுத்த நீதவான், விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சந்தேகநபர்களுக்கு உத்தரவிட்டதாக அவர் கூறினார். அதற்கமைய, ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட சந்தேகநபர்களிடம் உடனடியாக வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்ட மா அதிபர் , பதில் பொலிஸ் மா அதிபருக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கான அறிக்கையை எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என பதில் பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.