நாட்டில் 2646 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் 2646 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 14-07-2020 | 6:40 AM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 2,646 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். நேற்று (13) 29 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் இருவர் மாலைதீவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன் இராஜாங்கனையை சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர். ஏனையோரில் சேனபுர தனிமைப்படுத்தல் நிலையத்தின் 11 பேர் மற்றும் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் 14 பேர் அடங்குகின்றனர். இதுவரை 1,981 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதிகளவிலான கொரோனா நோயாளர்கள் பதிவான இராஜாங்கனையில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு அரச அலுவலகங்கள் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார். தமன்கடுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் 8 பிரிவுகளையும் சங்கபோதிகம மற்றும் ஸ்வாகம ஆகிய பிரதேசங்களையும் சேர்ந்த சிலர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர். தனியார் வர்த்தக நிலையத்தைச் சேர்ந்த சிலரும் 9 குடும்பங்களும் இவ்வாறு சுயதனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டார். இதனிடையே, பொலன்னறுவை - உணகலாவெஹேர ரஜமகா விகாரையும் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்டின் செய்தியாளர் கூறினார். குறித்த விகாரைக்கு வருகை தந்த ஒருவர் தொற்றுக்கு இலக்காகியிருந்தமை தெரியவந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கந்தக்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் 2 சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தெஹியத்தகண்டிய, தியவித்தாகம மற்றும் சேருபிட்டிய ஆகிய கிராமங்களிலுள்ள குறித்த சிப்பாய்களின் குடும்பத்தினர், தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். சிப்பாய்கள் இருவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்ததுடன் விடுமுறையில் சென்று மீண்டும் இராணுவ முகாமிற்கு திரும்பிய பின்னர் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இருவரினதும் சொந்த ஊர்களை சேந்ர்த சிலர் நேற்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனிடையே, வெலிக்கடை சிறைக்கைதி கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பின்னர் 498 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதில் புனர்வாழ்வு பெற்றுவந்த 429 பேரும் ஊழியர்கள் 47 பேரும் தொடர்புகளை பேணிய 16 பேரும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்