இன்று 07 பேருக்கு கொரோனா தொற்று

இன்று 07 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 14-07-2020 | 5:32 PM
Colombo (News 1st) இன்று இதுவரையான காலப்பகுதியில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,653 ஆக அதிகரித்துள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தொற்றுக்குள்ளானவருடன் பழகிய மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதியை சேர்ந்தவர்களாவர். இதேவேளை, ஓமானிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 03 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 625 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் இன்று குணமடைந்துள்ளனர். நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,988 ஆக அதிகரித்துள்ளது. இராஜாங்கனை விவசாயக் குடியேற்றத்திட்டப் பகுதியிலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்குள்ள 21 கிராம சேவகர் பிரிவுகளில் 11 பிரிவுகளிலுள்ளவர்களுக்கு கொரோனாத் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க குறிப்பிட்டார் அதற்கமைய, இராஜாங்கனை பகுதியில் 248 குடும்பங்களைச் சேர்ந்த 1,016 பேர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கண்டி - குண்டசாலை பகுதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் திஸ்ஸ கருணாரத்ன குறிப்பிட்டார். கண்டி, பஹதஹேவாஹெட்ட பிரதேச செயலகப் பிரிவில் மயிலப்பிட்டிய பகுதியிலும் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த இருவர் கொரோனா தொற்றுடன் மொனராகலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் குணதாச சமரசிங்க குறிப்பிட்டார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திற்கு சென்றவர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் திரட்டப்படுவதாகவும், அவ்வாறானவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொனராகலை மாவட்ட செயலாளர் கூறினார் இதேவேளை,யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் தொழில்நுட்பப் பிரிவு இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றியவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் தகவல்கள் திரட்டப்படுகின்றன. இறுதியாண்டு பரீட்சைக்கு தோற்றிய மாணவி ஒருவரின் சகோதரனுக்கு COVID -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் தற்போது சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், இன்று மாலை கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் குறித்த மாணவிக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் குறிப்பிட்டார். இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கடமையாற்றிய பதுளை, பசறையை சேர்ந்த ஒருவருக்கும் PCR சோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. இவருக்கான சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.