கொரோனா ஒழிப்பு தொழில்நுட்பக் குழு கூடாமை தொடர்பில் வைத்திய அதிகாரிகள் அதிருப்தி

by Staff Writer 13-07-2020 | 8:36 PM
Colombo (News 1st) தொழில்நுட்பக் குழு ஒரு மாதத்துக்கு மேல் கூடாமை பாரதூரமான விடயமாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இரண்டாவது அலையின் பாரதூரத் தன்மை தொடர்பில் தொடர்ச்சியாக தாம் கவனம் செலுத்தி வந்திருந்த நிலையில் அதனை தடுப்பது தொடர்பில் குறிப்பிட்டிருந்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே கூறினார். பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் உள்ள ஆபத்து, விமான நிலையத்தை திறப்பது தொடர்பிலான ஆபத்து, தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் தொடர்பில் குறிப்பிட்டிருந்த போதிலும் அவை குறித்த தொழில்நுட்ப தீர்மானங்களை எடுக்கவேண்டிய தொழில்நுட்பக் குழு ஒன்றரை மாதங்களாக கூடவில்லை என அவர் குறிப்பிட்டார். இறுதியில் குழுவை கூட்டுவதை தாமதிக்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் 6ஆம் திகதி தெரிவித்ததாக கூறினார். அதனுடனேயெ இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் வௌிவர ஆரம்பித்ததாகவும் தாம் அறிவித்ததன் பின்னர் கடந்த சனிக்கிழமை குழுவை கூட்டியுள்ளதாகவும் குழு செயற்படாததை நாம் ஒரு குறைபாடாக காண்பதாகவும் வைத்தியர் ஹரித அளுத்கே அதிருப்தி வௌியிட்டுள்ளார். ஏப்ரல், மே மாதம் கலந்துரையாடிய விடயங்களை விட முழுமையாக மாறுபட்ட நிலை உள்ளமையால் தாம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியதால் நோயாளர்களை அடையாளம் கண்டதாக கூறினார் ஆனால் தற்போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாமலேயே நோய் காவிகளை அடையாளம் காணவேண்டிய தேவையுள்ளதாகவும் நோயாளர்கள் சந்தித்த ஏனையவர்களை அல்லது நோய் காவிகளை இனங்காணத் தவறினால் பாரியளவில் தொற்று பரவும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் வைத்தியர் இதன்போது கூறினார். தனிமைப்படுத்தலுடன் பயணக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதாகவும் கிராமங்களை தனிமைப்படுத்தி பிரச்சினையிலிருந்து மீளுவதா அதற்கும் அப்பால் சென்று முழு மாவட்டத்திற்கும் தாக்கம் செலுத்தும் விதத்தில் செயற்படுவதா என்பது தொடர்பிலான தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதம செயலாளர், வைத்தியர் ஹரித அளுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.