தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்பு நாளை ஆரம்பம்

by Staff Writer 12-07-2020 | 9:02 AM
Colombo (News 1st) பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை (13) முதல் ஆரம்பமாகின்றது. இதனடிப்படையில், நாளை அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை கட்டம் கட்டமாக தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் முப்படையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் வாக்களிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன்ஶ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இந்த 5 நாட்களிலும் வாக்களிக்க முடியாத அரச உத்தியோகத்தர்கள், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்திலிருக்கும் தேர்தல் காரியாலயத்தில் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தமக்கான நாட்களில் வாக்குகளை அளித்து ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தபால் மூல வாக்காளர்களிடமும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.