தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம் 

தனியார் பஸ் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம் 

by Staff Writer 12-07-2020 | 12:39 PM
Colombo (News 1st) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்களினால் நாளை (13) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு என்பன இந்த விடயத்தை நியூஸ்பெஸ்ட்டுக்கு உறுதிப்படுத்தின. எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக் கொடுத்தல் அல்லது பஸ் கட்டணத்தை உயர்த்துதல், பஸ் உரிமையாளர்களுக்காக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் 3 இலட்சம் ரூபா கடன் தொகையை சலுகை வட்டியுடன் வழங்குதல், மாகாண சபைகளுக்குட்பட்ட நிறுவனங்களினூடாக செலுத்தப்படும் நிதிக்கு டிசம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தனியார் பஸ் ஊழியர்களினால் நாளை பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவிருந்தது. இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க போக்குவரத்து அமைச்சர் இணக்கம் தெரிவித்தமையினால் பகிஷ்கரிப்பை கைவிடுவதாக தனியார் பஸ் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தனியார் பஸ் ஊழியர்கள் சங்கத்தினரின் பிரதான கோரிக்கைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்து தீர்வை பெற்றுக் கொடுக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார். எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கவோ அல்லது பஸ் கட்டணங்களை உயர்த்தவோ முடியாதென போக்குவரத்து அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பஸ் சேவைகளிலிருந்து விலக வேண்டாமென தனியார் பஸ் உரிமையாளர்களிடம் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.