கந்தக்காடு மத்திய நிலையத்தின் ஆலோசகருக்கும் அவரின் இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று

கந்தக்காடு மத்திய நிலையத்தின் ஆலோசகருக்கும் அவரின் இரு பிள்ளைகளுக்கும் கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2020 | 8:37 pm

Colombo (News 1st) கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்ட அனுராதபுரம் – திசாவெவ இராணுவ முகாம் உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனுராதபுரம் – திசாவெவ இராணுவ முகாமின் கீழ் சேவையாற்றிய குறித்த அதிகாரி சில நாட்களாக கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.

அவர் தமது உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அனுராதபுரம் – இராஜாங்கனை பகுதிக்கு கடந்த முதலாம் திகதி சென்றுள்ளார்.

குறித்த இராணுவ உறுப்பினரின் வீட்டில் மரணச் சடங்கின் கிரியைகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது, காய்ச்சல் காரணமாக அவர் அனுராதபுரம் இராஜாங்கனை ஐந்தாம் கட்டை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், அவரை பிரதேச வைத்திய அதிகாரி PCR பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இதன்போது உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகு அவரது வீட்டிலுள்ளவர்களும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், அவரின் 11 மற்றும் ஒன்றரை வயதான பிள்ளைகள் இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவருடைய மனைவி PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ உறுப்பினர் கலந்துகொண்ட மரணச்சடங்கு மற்றும் கிரியைகளில் 200-க்கு மேற்பட்டோர் சமூகமளித்திருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தற்போதைக்கு அவரின் வீட்டை அண்மித்துள்ள சில வீடுகளைச் சேர்ந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம், இராஜாங்கனை, தம்புத்தேகம பகுதிகளில் நடத்தப்படும் வகுப்புகளை மறு அறிவித்தல் வரை நிறுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,464 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாத்திரம் 300 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அவர்களில் 283 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் அடையாளம் காணப்பட்டதுடன், எஞ்சியவர்களில் 9 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்களாவர்.

மூவர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்தும், ஒருவர் பாகிஸ்தானிலிருந்தும் வருகை தந்துள்ளார்.

கந்தக்காடு மத்திய நிலையத்தில் தொற்றுக்குள்ளான ஒருவருடன் நெருங்கிப் பழகிய மூவரும் நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

வெலிக்கடை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதியும் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதி செய்யப்பட்டதுடன், அவர் இதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட தொற்றுக்குள்ளான நபருடன் பழகியவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைக்கு 463 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றிலிருந்து 1980 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் ஆய்வுக்கூடப் பிரிவு தெரிவிக்கின்றது.

நாட்டில் ஸதாபிக்கப்பட்டுள்ள 08 தனிமைப்படுத்தல் முகாம்களில் 238 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து இன்று வீடுகளுக்கு சென்றதாக இராணுவம் கூறியது.

இதுவரை தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 20,956 பேர் வீடுகளுக்கு சென்றுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

49 மத்திய நிலையங்களில் 5889 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்