அங்குலானையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

அங்குலானையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு: விசாரணை ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

11 Jul, 2020 | 3:10 pm

Colombo (News 1st) மொரட்டுவை – லுணாவ பகுதியில் அங்குலானை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்குலானை மற்றும் லுணாவ ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள பாலத்தை அண்மித்த வீதித்தடையில் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (10) நள்ளிரவு 12.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்காக நிறுத்திய சந்தர்ப்பத்தில் அதிலிருந்த ஒருவருக்கும் பொலிஸ் உத்தியோகத்தருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கல்லால் அடிக்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் இடம்பெற்ற போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபரின் மகனும், சகோதரரும் முச்சக்கரவண்டியில் இருந்துள்ளனர்.

துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த குறித்த நபர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் அங்குலானை பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்