ராடா வழக்கு: டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பு

by Staff Writer 10-07-2020 | 3:23 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட 04 பிரதிவாதிகள் ராடா (RADA) வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான அன்டனி எமில்காந்தன் என்பவரைத் தவிர்ந்த ஏனைய பிரதிவாதிகளின் வௌிநாட்டுக் கடவுச்சீட்டுகளை மீள கையளிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார். இதனூடாக பிரதிவாதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வௌிநாட்டுப் பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது. அன்டனி எமில்காந்தனை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை வலுவிழக்கச் செய்யுமாறு அவரின் சட்டத்தரணிகளால் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பிரதிவாதி மன்றில் ஆஜராகிய பின்னர் இந்த கோரிக்கையை முன்வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கின் முதலாவது சாட்சியாளரான ராடா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட சந்திரகாந்தி பெர்னாண்டோ என்பவருக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் அறிவித்துள்ளார். வழக்கிற்கு பாதகமாகக் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளின் போதும், அண்மையிலும் இன்றும் வழங்கப்பட்ட சாட்சியங்களில் வித்தியாசங்கள் காணப்படுவதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு தெரிவித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக, திறைசேரியிலிருந்து ராடா எனப்படும் மீள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணம் ஆகியவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ், அன்டனி எமில்காந்தன், ராடா நிறுவனத்தின் முகாமைத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாநிதி ரொஹான் வீரவிக்ரமசூரிய மற்றும் ஜயந்த டயஸ் அமரசிங்க ஆகியோர் இந்த வழக்கின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.