கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்று

எழுத்தாளர் Staff Writer

10 Jul, 2020 | 4:07 pm

Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனடிப்படையில், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 252 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் 338 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர்களில் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நிலையத்தில் தொடர்ந்தும் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதார பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையாக கந்தக்காடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையம் மாற்றப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கொழும்பில் வசிப்போருக்கு PCR சோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எழுமாற்று பரிசோதனையாக PCR சோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக கொழும்பு- 15, காக்கைத்தீவு பகுதியில் வசிப்போருக்கு PCR சோதனை முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2,350 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 360 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 1,979 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பு – புறக்கோட்டை, பெங்ஷோல் வீதி பகுதியை சேர்ந்த 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து வந்தவர் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டையில் மூடை தூக்கும் தொழிலில் ஈடுபடும் இவர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருங்கிப் பழகியவராவார்.

ஏனைய நான்கு பேரும் கொரோனா தொற்றாளருடன் தொடர்புகளைப் பேணியவர்கள் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இவர்கள் 5 பேரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்