MCC தொடர்பில் அமைச்சர்கள் பரிந்துரை வழங்க இரண்டு வார கால அவகாசம்

by Staff Writer 09-07-2020 | 8:33 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கை தொடர்பான மீளாய்வுக் குழுவின் அறிக்கை அமைச்சர்களிடமே தற்போதுள்ளது. அறிக்கை தொடர்பான அமைச்சர்களின் கருத்துக்களை முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், சில அமைச்சர்கள் மாத்திரமே இந்த வாரம் பரிந்துரைகளை அமைச்சரவைக்கு முன்வைத்திருந்தனர். இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போது, அமைச்சர்கள் முன்வைத்த கருத்துக்களை அமைச்சரவைக்கு அனுப்பியுள்ளதாகவும், ஏனையவர்கள் இதனை ஆழமாக ஆராய வேண்டும் என குறிப்பிட்டதால், இரண்டு வார கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சரவை இணை பேச்சாளர், அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார். இந்நிலையில், MCC ஒப்பந்தத்தை நிராகரிப்பதற்கு எந்தவொரு தடையும் இல்லை என முன்னாள் நிதி அமைச்சரான மங்கள சமரவீர தெரிவித்தார்.
ஐக்கிய அமெரிக்காவினால் MCC ஒப்பந்தத்திற்காக 5 சதமேனும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை. இந்த ஒப்பந்தத்தில் ஆரம்பம் முதலே பங்குபற்றியவன் என்ற விதத்தில் நான் விடயங்களை அறிந்து வைத்துள்ளேன். 2006 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வௌிவிகார அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி என்னிடம் முதல் கோரிக்கையாக, எப்படியாவது அமெரிக்காவிற்கு சென்று இராஜாங்க செயலாளரான கொன்டலிஸா ரைசை சந்தித்து உரையாடி இது கிடைப்பதற்கு வழி செய்யுமாறு கோரினார். இந்த ஒப்பந்தம் ரணில் விக்ரமசிங்க பிரதமாரக இருந்த காலத்தில் 2004 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. அந்த அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அந்த நிதியைப் பெற்றுக்கொள்ளும் பாரிய தேவை மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இருந்தது. நமது நிவாட் கப்ராலே அந்த அரசாங்கத்திலும், இந்த அரசாங்கத்திலும் ஏற்பாட்டாளர் பொறுப்பை வகித்தார். இறுதியில் 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் வைத்து மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷூக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடத் தயாராகியிருந்த தருணத்திலேயே இங்கு வௌ்ளை வேன் கலாசாரம் ஆரம்பமாகியது. ரவிராஜ் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். வௌ்ளவத்தை பகுதியில் இளைஞர்களைக் கப்பம் கோரி கொன்றனர். திருகோணமலையில் இன்னும் சிலர் கொல்லப்பட்டனர். இந்த மாற்றத்தை அடுத்து தற்போது இலங்கைக்கு கொடுக்க முடியாது என்று அமெரிக்கா அறிவித்தது. ஏனென்றால் அது வழங்கப்படுவதற்கான பிரதான மற்றும் ஒரே நிபந்தனை நாட்டில் ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுவது தான்.
என மங்கள சமரவீர கூறினார். நாட்டிற்காக அதனைக் கையொப்பமிட முடியும் என கூறிய அவர், கையொப்பமிடாதிருப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என கூறுவது சுத்தப் பொய் எனவும் குறிப்பிட்டார்.