யாழில் வாள்வெட்டு: அறுவருக்கு விளக்கமறியல் 

யாழ். மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரிக்கு வாள்வெட்டு: அறுவருக்கு விளக்கமறியல் 

by Staff Writer 09-07-2020 | 5:04 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நேற்று (08) நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக பொலிஸார் கூறினர் CCTV காணொளிகளை ஆதாரமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 04 சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், மல்லாகம் பகுதியை சேர்ந்த 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், நீர்வேலி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 03 மோட்டார் சைக்கிள்களும் 02 வாள்களும் கைக்குண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். இந்த 04 சந்தேகநபர்களிடமும் மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணைகளின் பின்னர் கோப்பாய் பகுதியில் மேலும் 02 சந்தேகநபர்கள் முச்சக்கர வண்டியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 24, 23, 26,28 மற்றும் 37 வயதான சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சுன்னாகம், இளவாழை, மல்லாகம் மற்றும் கோப்பாய் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.   மாவட்ட செயலகத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மீது நேற்று முற்பகல் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. மோட்டார் சைக்கிளில் அதிகாரியை பின்தொடர்ந்து இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஏனைய செய்திகள்