by Staff Writer 09-07-2020 | 10:10 PM
Colombo (News 1st) ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்கள் மீது பெரட்டாசி, பூச்சிகொட பகுதியில் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரனின் வாகனம் மற்றும் அவருக்கு ஆதரவாக சென்ற மற்றொரு வாகனம் மீது நேற்றிரவு 8.10 அளவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பூச்சிகொட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாகனத்தின் விளக்குகளும் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தின் பின்னர் முத்தையா பிரபாகரன் நேரடியாக நுவரெலியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
எவ்வாறாயினும், சம்பவம் புசல்லாவை பொலிஸ் பிரிவில் இடம்பெற்றதன் காரணமாக நுவரெலியா பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை புசல்லாவை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக புசல்லாவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், முதற்கட்டமாக இன்று வாக்குமூலம் பதிவு செய்ததாக புசல்லாவை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நியூஸ்ஃபெஸ்டிற்குத் தெரிவித்தார்.