கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா

by Staff Writer 09-07-2020 | 5:23 PM
Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார். கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்ட மாரவில பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். வெலிக்கடை கைதியுடன் 03 மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மற்றும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அடங்கலாக 450 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அங்கு மேற்கொள்ளக்கூடிய PCR சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.