மின் கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்

மின் கட்டண நிவாரணம்: அடுத்த வாரமே இறுதித் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

09 Jul, 2020 | 7:41 pm

Colombo (News 1st) கொரோனா காலப்பகுதிக்கான மின் கட்டண நிவாரணம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட போதிலும், இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதிக்கு வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் பல முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

மாதாந்த கட்டணத்தை விட அதிகளவு கட்டணத்துடனான மின்சாரப் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதால், அதனை செலுத்துவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வழங்கப்பட்ட மின் கட்டணப் பட்டியல் நியாயமானது அல்ல என பலர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை, மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

மார்ச் முதல் மே வரையான மூன்று மாதங்களுக்கான மின் கட்டணப் பட்டியல்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அதில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

1. குறிப்பிட்ட மாதங்களில் 90 அலகு வரை மின்சாரத்தை பயன்படுத்தியுள்ள பாவனையாளர்களின் கட்டணத்தில் இருந்து 25 வீதத்தை குறைத்தல்
2. கட்டணத்தை செலுத்துவதற்கு மூன்று மாத நிவாரணக் காலம் வழங்குதல்
3. தாமதக் கட்டணமாக அபராதங்களை அறவிடாதிருத்தல்
4. எவ்வித காரணத்திற்காகவும் மின் விநியோகத்தைத் துண்டிக்காதிருத்தல்

ஆகியன அமைச்சரின் யோசனைகளுள் அடங்குகின்றன.

எனினும், இந்த நிவாரணத்தை அதிகரித்து அடுத்த வாரம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் இறுதித் தீர்மானம் அடுத்த அமைச்சரவையிலேயே எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்