மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தும்

மார்ச், ஏப்ரலில் அதிகரித்த மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் செலுத்தத் தீர்மானம்

by Staff Writer 08-07-2020 | 7:14 PM
Colombo (News 1st) மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்த மின்சாரக் கட்டணப் பட்டியலில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மின்சாரக் கட்டணம் அதிகரித்ததன் காரணமாக நுகர்வோருக்கு வழங்கக் கூடிய அதிகபட்ச நிவாரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார். இன்று கூடிய அமைச்சரவை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் இரண்டு மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் வீட்டிற்குள்ளேயே தங்கியிருந்தனர். இதன் காரணமாக வீடுகளின் மின்சாரக் கட்டணப் பட்டியல் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார். வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அரசாங்கத்தால் ஆலோசனை வழங்கப்பட்டமையால் அதிகரித்த மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்தின் ஊடாக செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார். அதிகரித்த மின்சாரக் கட்டணத்திற்கு சலுகைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக மின்சக்தி அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, அமைச்சரவையில் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய, அந்தக் குழுவின் பரிந்துரைகளின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் கூடிய அதிகபட்ச நிவாரணமாக மின்சாரக் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கத்தால் செலுத்த தீர்மானிக்கப்பட்டதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.