தமிழ் மக்களின் உரிமைகளை நிராகரிக்க முடியாது 

தமிழ் மக்களின் உரிமைகளை எவராலும் இலகுவில் நிராகரிக்க முடியாது: சம்பந்தன் அறிக்கை

by Staff Writer 08-07-2020 | 5:29 PM
Colombo (News 1st) நீண்டகால கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பின்பற்றி வரும் தமிழ் மக்களுடைய உரிமைகளை எவராலும் இலகுவில் நிராகரிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனை மிகவும் உறுதியாக வலியுறுத்த விரும்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில், ஒரு மக்கள் குழுவை ஆட்சி புரிய ஜனநாயக ரீதியாக அந்த மக்களுடைய சம்மதமும் இணக்கமும் பெறப்படுதல் அவசியம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 1956 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட ஜனநாயக ரீதியான தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் இரா.சம்பந்தனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட்டு அதி உச்ச அளவில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, மக்கள் தங்களுடைய கருமங்களைக் கையாளக்கூடிய வகையிலான அரசியல் அமைப்பு முறை உலகின் பல நாடுகளில் நிலவுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான ஆட்சிமுறை நாட்டிலும் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள சம்பந்தன், இதனை எவராலும் உதாசீனம் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசியல் குடியியல் உரிமைகள் மற்றும் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளின் அடிப்படையில், ஒரு மக்கள் குழாமிற்கு உள்ளக சுயநிர்ணய உரித்து காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அனைத்து விடயங்களையும் இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இவற்றை நிறைவேற்ற வேண்டியது இலங்கை நாட்டினதும் அரசாங்கத்தினதும் கடமை எனவும் இவை மறுக்கப்படுகின்ற போது விளைவுகள் பாதகமாக அமையலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்