சிவாஜிலிங்கத்திற்கு எதிரான மனு நிராகரிப்பு

எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

by Staff Writer 08-07-2020 | 4:07 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - நவாலி சென். பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு செல்ல, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு தடை விதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முற்படுகின்றமை மற்றும் சென். பீட்டர்ஸ் தேவாலயத்திற்கு முன்பாக 150-இற்கும் அதிகமானவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளமை போன்ற தகவல்களை அடிப்படையாக வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தமது சேவை பெறுநர் மீது திட்டமிட்டு புனையப்பட்ட குற்றச்சாட்டு என எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். தேங்காய் உடைத்து எம்.கே.சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தங்களுக்கு புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர். இதனை எம்.கே சிவாஜிலிங்கம் தரப்பு சட்டத்தரணி முற்றாக நிராகரித்ததுடன், வழிபடுதல் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். வழிபாடுகளில் ஈடுபடுவது தனிநபர் உரிமை என சுட்டிக்காட்டிய மல்லாகம் நீதவான், எம்.கே.சிவாஜிலிங்கம் மீது தடை விதிக்குமாறு பொலிஸார் முன்வைத்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளார். நவாலி சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் நாளை (09) நடைபெறவுள்ள ஆராதனை மற்றும் கொல்லப்பட்டவர்களை நினைவுகூர்தல் தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அறிக்கை சமர்பிக்கும் தினத்தன்று எம்.கே.சிவாஜிலிங்கம் மன்றில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார். 1995 ஆம் ஆண்டு சென். பீட்டர்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த போது விமானக் குண்டுத் தாக்குதலில் 150 பேர் வரையில் கொல்லப்பட்ட நினைவு தினம் நாளை என்பது குறிப்பிடத்தக்கது.