விலைமனுக் கோரலின்றி கொழும்பிலுள்ள பெறுமதியான காணிகளை குத்தகைக்கு வழங்க முயற்சி: பாட்டலி வௌிக்கொணர்வு

by Staff Writer 07-07-2020 | 7:42 PM
Colombo (News 1st) கொழும்பிலுள்ள சில காணிகளை உரிய நடைமுறைக்கு மாறாக சில செயற்றிட்டங்களுக்காக வழங்குவதற்கான முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று தகவல்களை அம்பலப்படுத்தினார். வர்த்தமானியை நீக்கி, மீண்டும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் கருங்கற்கள் மற்றும் மணலுக்கு ஏற்பட்டுள்ள அழிவை பெறுமதியான காடுகளுக்கும் சுற்றாடல் முக்கியத்துவம் வாய்ந்த காணிகளுக்கும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். இது எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கப்படும் பாரதூரமான குற்றம் என அவர் தெரிவித்தார். பொதுத்தேர்தலின் பின்னர் கொழும்பு நகரில் அபிவிருத்திக்காக விடுவிக்கப்பட்ட அதிகளவிலான காணிகளை வௌிநாட்டவர்களுக்கு மறைமுகமாக வழங்க ராஜபக்ஸ அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். இதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகக் கூறிய அவர், எவ்வித விலை மனுக் கோரலும் இன்றி ஷங்ரில்லாவிற்கு பின்புறமாகவுள்ள காணியை ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வழங்கியதை சுட்டிக்காட்டினார்.
எமது அமைச்சின் கீழ், மெனிங் சந்தை பேலியகொடைக்கு கொண்டு செல்லப்பட்டது. எமது அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மெனிங் சந்தை பகுதி திறக்கப்பட்டது. அந்த இடத்தில் கொழும்பின் பிரதான பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க நாம் திட்டமிட்டிருந்தோம். பிரான்ஸ் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரே அதனை திட்டமிட்டார். அந்த ஒட்டுமொத்த காணியையும் மேலும் பல ஒப்பந்தங்களையும் விலை மனுக் கோரலின் கீழ் வௌிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக எமக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளது
என பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டார்.
5 வீதிகள் எவ்வித விலைமனுக் கோரலுமின்றி வௌிநாட்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அம்பலப்படுத்தியதை அடுத்து, தற்போது இரத்தினபுரி வீதியை மாத்திரம் உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. கிடைத்துள்ள தகவலுக்கு அமைய, மீதொட்டமுல்லையில் பூங்காவாக மாற்றவிருந்த காணியை இதே முறையில் வௌிநாட்டவர்களிடம் கையளிக்க முயல்கின்றனர்
என அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார்.
நாம் ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து கடுவெலவில் இருந்து புறக்கோட்டை வரை இலகு ரயில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டோம். இதனை அரச, தனியார் கலப்புத் திட்டமாக மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். இதில் இரண்டு நடைமுறைகள் உள்ளன. ஜப்பான் நிதியுதவியில் நாம் திட்டத்தை முன்னெடுக்கும் போது, இலாபமீட்டும் நாளில் இருந்து நாம் கடனை செலுத்த வேண்டும். எனினும், தனியார் முதலீட்டாளர் வரும் போது அந்த முதலீட்டுக்கு வருடத்திற்கு ஒரு முறையேனும் பணம் செலுத்த நேரிடும். இல்லாவிட்டால், அவருக்கு காணியை வழங்க வேண்டும். காணியை வழங்குவதா, இல்லையா என்பதை பகிரங்கப்படுத்த வேண்டியது மஹிந்த ராஜபக்ஸவின் பொறுப்பாகும். இந்தத் திட்டங்கள் தொடர்பில் இரண்டு தலைவர்களும் பதில் வழங்குவதில்லை
என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.