by Staff Writer 07-07-2020 | 4:11 PM
Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் இருந்த கைதிகளுக்கு PCR சோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான கைதி இதற்கு முன்னர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தமையால், அங்குள்ளவர்களுக்கும் PCR சோதனை மேற்கொள்ளவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 174 கைதிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள 450 பேருக்கும் பரிசோதளை மேற்கொள்ளப்படவுள்ளது.
இவர்கள் அனைவருக்குமான PCR சோதனைக்குரிய பெறுபேறுகள் இன்றிரவு கிடைக்கும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான கைதிக்கு தொற்று பரவிய விதம் தொடர்பில் தற்போது ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து கடந்த ஜூன் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட ஒருவரே இன்று கொரோனா தொற்றுடன் அடையாளங்காணப்பட்டார்.
இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகளைப் பார்வையிட தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.