ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு

ரவி கருணாநாயக்க உள்ளிட்டோருக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2020 | 12:21 pm

Colombo (News 1st) மத்திய வங்கியின் முறிகள் மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேரை கைது செய்வதற்காக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் தமக்கு எதிரான பிடியாணை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.

இந்த மனு இன்று (07) பரீசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிடியாணையை இடைநிறுத்தி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மனு மீதான விசாரணையை நிறைவு செய்யும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை உத்தரவை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி A.H.M.B. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோபித்த ராஜகருணா ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மத்திய வங்கியின் முறிகள் ஏலத்தின் போது, 51.98 பில்லியன் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்று பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவானது முறிகள் மோசடி விவகாரம் தொடர்பான விவகாரம் தொடர்பில் எவ்வித இடையூறாகவும் அமையக்கூடாது என நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சந்தேகநபர்கள் வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்