Colombo (News 1st) நிர்மாணம் என்பது அபிவிருத்தியின் ஒரு பகுதி.
சுற்றுச்சூழலை எதிர்கால சந்ததிக்காக பாதுகாப்பதற்கான சட்ட முறைமைகள் எமது நாட்டில் போதியளவில் காணப்படுகின்றன.
இந்த சட்டவிதிகளை கவனத்திற்கொள்ளாது சுற்றாடலை அழித்து நிர்மாணப் பணிகளுக்கு அவசியமான மணலைக் கடத்தும் வியாபாரம் பரந்தளவில் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த வியாபாரத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு உள்ளது.
ஹொரணை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவக் ஓயா அமைந்துள்ள சோதுருப்ப ஓவிட்ட பகுதியில் இரத்தினக்கல் அகழ்வு முன்னெடுக்கப்படும் நிலையில், பாரியளவில் மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.
நேற்று குறித்த பகுதியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தனர். சுற்றிவளைப்பில் ஹொரணை விசேட அதிரடிப்படைப் பிரிவு அதிகாரிகள், புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பிரிவினரும் பங்கேற்றிருந்தனர்.
மூன்று ஏக்கர் பகுதியில் இரத்தினக்கல் அகழ்வதற்கு அனுமதிப்பத்திரம் இருந்த போதிலும், மணல் அகழ்விற்கு மணலை சேமிக்க அல்லது மணலை விநியோகிப்பதற்கான அனுமதிப்பத்திரம் அவர்களிடம் இருக்கவில்லை.
சுற்றிவளைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் 150 கியூப் மணல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. மணலை ஏற்றிச் செல்வதற்கு தயாராக இருந்த லொறியும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பாரியளவிலான மணல் அகழ்விற்கு ஸ்குவேடர் இயந்திரங்கள் இரண்டும் மணலை தூய்மைப்படுத்தும் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தப் பகுதியில் மணல் அகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
மணல் அகழ்வு காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கந்தளாய் முக்கிய இடம் வகிக்கின்றது.
கந்தளாய் - சூரியபுரவிலிருந்து நிலப்புர வரையான மகாவலி கங்கையோரத்தில் பாரிய மணல் அகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
கந்தளாய் பகுதியில் இருந்து அகழப்படும் மணல் விற்பனையில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுகின்றன.
சுற்றாடலுக்கும் கொள்வனவாளர்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்தி முன்னெடுக்கப்படும் இந்த செயற்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?
மணலுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே காணிகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
நாடு அபிவிருத்தியடையும் போது, சனத்தொகை அதிகரிக்கும் போது, காணிகளின் பெறுமதியும் அதிகரிக்கின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட இரண்டு சுற்றுநிரூபங்கள் மூலம் எஞ்சிய காடுகள் என அடையாளப்படுத்தப்படுகின்ற காணிகள் ஏதேச்சையான முறையில் பல்வேறு தரப்பினர்களின் கைகளில் சேர்வது தடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய காணிகளை ஏதேனுமொரு நடவடிக்கைக்கு பயன்படுத்துவதாக இருந்தால், குறித்த சுற்றுநிரூபங்களுக்கு அமைய குழுவொன்றை நியமித்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் அனுமதி பெற வேண்டும். இதன் காரணமாக எஞ்சிய காடுகள் அண்மைக்காலமாக பாதுகாக்கப்பட்டன.
எனினும், கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் இந்த சுற்றுநிரூபங்களில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்தத் திருத்தம் ஊடாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் மீண்டும் இந்த காணிகளை பல்வேறு நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.
ஹம்பாந்தோட்டை உத்தேச காட்டு யானை முகாமைத்துவ சரணாலயம், கிரிமலை சரணாலயம், கிரிபத்கல மலை என்பன எஞ்சிய காடுகள் என அழைக்கப்படுகின்ற சில பகுதிகளாகும்.
எஞ்சிய காடுகள் என அடையாளப்படுத்தினாலும் இந்த காணிகள் உயிர் பல்வகைமை மற்றும் அதிக சுற்றாடல் பெறுமதி மிக்க காணிகளாக அமைந்துள்ளன.
தற்போது இந்த காணிகளை தனிநபர் தீர்மானத்திற்கு அமைய, செயற்றிட்டங்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக சுற்றுநிரூபங்களில் திருத்தம் மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவையில் முன்வைப்பதற்கான பொறுப்பு அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 5/2001 சுற்றுநிரூபத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான செனரத் பண்டார ஹுனுகும்புர உயிரினங்கள் சிலவற்றுடன் இன்று சுற்றாடல் அமைச்சிற்கு சென்றிருந்தார்.
எவ்வாறாயினும், அந்த உயிரினங்களை அமைச்சிற்குள் எடுத்துச்செல்வதற்கு இதன்போது அனுமதி கிட்டவில்லை.
எஞ்சிய காடுகளை அழித்து, மரங்களை வெட்டி விற்று, காணிகளை பாரிய நிறுவனங்களுக்கு வழங்கி சுற்றாடலை அழிப்பதற்கு முயற்சிக்கின்றனர். அதற்கு எதிராகவே நான் இன்று சுற்றாடல் அமைச்சிற்கு வந்தேன். இறுதியில் இந்த ஊர்வன உள்ளிட்ட காடுகளிலுள்ள அனைத்து உயிரினங்களும் நிர்கதியாகும். இந்த சுற்றுநிரூபத்தை இரத்து செய்ய இவர்கள் நடவடிக்கை எடுத்தால், இலங்கையில் உயிரினங்கள் மீது அக்கறைகொண்டுள்ள அனைவரையும் இங்கே திரட்டுவேன். உயிரினங்களுக்கும் இந்த நாட்டில் இடமிருக்க வேண்டும்