by Staff Writer 07-07-2020 | 9:28 PM
Colombo (News 1st) சுகாதார அமைச்சினால் விடுக்கப்படுகின்ற மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் சிக்கல் நிலை ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதாக அரச மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
இந்த விடயத்தை சுட்டிக்காட்டி குறித்த தரப்பினர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
COVID-19 தொற்று தொடர்பில் PCR பரிசோதனை மேற்கொள்ளும் சுகாதார அமைச்சின் எந்தவொரு ஆய்வுக்கூடமும் அவற்றின் அதிகபட்ச பரிசோதனை எல்லையை அண்மிக்கவில்லை என சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு PCR பரிசோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்படுகின்றமை அநாவசிய சிக்கல் நிலையைத் தோற்றுவிக்கக் காரணமாக அமையும் என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் ஜிந்துப்பிட்டியில் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வழங்கப்பட்ட அறிக்கை சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுக்கூடமொன்றினால் வழங்கப்பட்டது அல்லவென தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ரவி குமுதேஷின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வுக்கூடங்கள் தொடர்பில் விசாரணையும் கணக்கெடுப்பும் நடத்துமாறு அரச மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.