கொரோனா தொற்றுக்குள்ளான கைதி தேசிய தொற்றுநோயியல் ஆய்வுக்கூடப் பிரிவிற்கு அனுப்பி வைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி தேசிய தொற்றுநோயியல் ஆய்வுக்கூடப் பிரிவிற்கு அனுப்பி வைப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2020 | 9:11 pm

Colombo (News 1st) வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானவராக இன்று அடையாளம் காணப்பட்டார்.

அவருக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது இன்னும் உறுதியாகக் கண்டறியப்படவில்லை.

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதி செய்யப்பட்டதன் பின்னர் தேசிய தொற்றுநோயியல் ஆய்வுக்கூடப் பிரிவிற்கு அனுப்பப்பட்டார்.

42 வயதான குறித்த நபர் போதைப்பொருள் தொடர்பிலான சம்பவமொன்றுக்காக சிறைவைக்கப்பட்டவராவார்.

இந்நபர் இதற்கு முன்னர் சில மாதங்கள் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததுடன், அந்தக் காலப் பகுதியில் தனிமைப்படுத்தலுக்குட்பட்ட சிலர் அங்கு தனியான பிரிவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த கைதி கடந்த ஜூன் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளிடம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வளிப்பு மத்திய நிலையத்திலிருந்த 450 கைதிகளிடம் PCR பரிசோதனைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் ஆய்வுக்கூடப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவடன கூறினார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளைப் பார்வையிடுவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் இன்று பிற்பகல் அறிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்