துறைமுக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட இடமளிக்க மாட்டோம்: துறைமுகங்கள் சபையின் தலைவர் தெரிவிப்பு

by Staff Writer 04-07-2020 | 7:59 PM
Colombo (News 1st) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு வலியுறுத்திய நிலையில், துறைமுக ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. ஒன்றரை மாதத்தில் கிழக்கு முனையத்தில் பாரந்தூக்கியை நிறுவுவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. கிழக்கு முனையத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற ஜெனரல் தயா ரத்நாயக்க தௌிவுபடுத்தினார்.
கடந்த அரசாங்கத்தினால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எனினும், அதற்கு தற்காலிகத் தீர்வினை எட்டியுள்ளோம். சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலுள்ள பிரச்சினை எமது துறைமுக செயற்பாடுகளுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை. துறைமுக செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதற்கு எமது அரசாங்கமோ, நாங்களோ இடமளிக்க மாட்டோம். சர்வதேச வர்த்தகத்தில் பலவித கருத்துக்கள் சமூகத்தில் ஏற்படும். அது துறைமுகத்திற்கு அழுத்தம் விடுப்பது இல்லை.
இதேவேளை, துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையிலிருந்து நீக்கும் சூழ்ச்சி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுவதாக துறைமுக தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் கிழக்கு முனைய நடவடிக்கையை இலங்கை துறைமுக அதிகார சபை நூறு வீதம் முன்னெடுக்க வேண்டும். அது தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படாது என்ற வாக்குறுதியை வழங்க வேண்டும் என்பதே எமது முதலாவது கோரிக்கை
என துறைமுகம், வாணிபம் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் தலைவர் சஞ்சய குமார வெலிகம குறிப்பிட்டார்.
நடவடிக்கையை ஆரம்பிக்கும் போது சில பிரச்சினைகள் ஏற்படும் என நாம் நம்புகின்றோம். கடந்த நான்கரை வருடங்களில் துறைமுக அதிகாரிகள் மிகவும் போலியான, முழுமையற்ற தகவல்களையே ஜனாதிபதி செயலாளர்களுக்கு வழங்கியுள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் தயாரித்த திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனை எதிர்காலத்தில் நிவர்த்திக்க முடியும் என நம்புகின்றோம். முன்னைய முறைகேடுகள், தற்போது இடம்பெறும் விடயங்கள் குறித்து ஆராய்வதற்கும் 45 நாட்களுக்குள் பதிலளிப்பதற்கும் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சரியான அனைத்துத் தகவல்களையும் அந்தக் குழுவிடம் ஒப்படைப்பதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்
என துறைமுகம், வாணிபம் மற்றும் முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஷாமல் சுமனரத்ன குறிப்பிட்டார்.