24 மணித்தியாலங்களில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 22,000 பேருக்கு கொரோனா தொற்று

by Bella Dalima 04-07-2020 | 4:02 PM
Colombo (News 1st) இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 22 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். இதுவரை ஒருபோதும் பதிவாகியிராத, நாளொன்றில் உறுதி செய்யப்பட்ட தொற்றாளர்களின் அதிக எண்ணிக்கையாக இது அமைந்துள்ளது. 22 ,771 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதேவேளை, 442 கொரோனா மரணங்களும் கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தியா முழுவதிலும் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 ,48,315 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,655 ஆகவும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் கொரோனா தொற்று மிக அதிகமாகி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. நேற்று (03) காலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 20,903 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அத்துடன், கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றது. தொற்று வேகமாக அதிகரித்து வருவதனையடுத்து சர்வதேச விமானசேவைகளை முன்னெடுப்பதற்கான தடை இம்மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விசேட விமானங்கள், மீட்பு விமானங்கள் என்பன தொடர்ந்தும் இயக்கப்படுமென மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜூன் 26 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானசேவைத் தடை, முன்னதாக ஜூலை 15 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா தொற்று அதிகரிப்பதையடுத்து, ஜூலை மாதம் முழுவதும் சர்வதேச விமான சேவையை இரத்து செய்ய தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.